கோமதி: திரிபுராவின் கோமதி மாவட்டத்தில் உள்ள 524 ஆண்டுகள் பழமையான திரிபுர சுந்தரி கோயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். இது, மத்திய அரசின் பிரசாத் திட்டத்தின் கீழ் ரூ.52 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் கோமதி மாவட்டத்தில் உள்ளது உதய்பூர். இங்கு 524 ஆண்டுகள் பழமையான திரிபுர சுந்தரி கோயில் உள்ளது. இது, வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் சின்னமாகவும் உள்ளது.
கடந்த 1501 ஆம் ஆண்டு மகாராஜா தன்ய மாணிக்யாவால் என்பவரால் கட்டப்பட்டது இந்த திரிபுர சுந்தரி கோயில், இது 51 சக்திபீடங்களில் ஒன்றாகும். இந்து புராணங்களின்படி, சக்தியின் பாதங்கள் இங்கு விழுந்ததாக நம்பிக்கை உள்ளது.
’குர்ப்பீத்’ என்றும் அழைக்கப்படும் இக்கோயில், தாந்த்ரீக நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். அதே வகையில், மற்றொரு சக்திபீடமாக அசாமின் கவுகாத்தியில் உள்ள காமக்யா கோயிலும் உள்ளது. நவராத்திரி மற்றும் தீபாவளியின் போது இங்கு நடைபெறும் விழாக்கள் மிகவும் பிரபலமாகும். அப்போது, வட கிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இங்கு வரும் பக்தர்களின் கூட்டம் பல லட்சங்களை தாண்டுகின்றன.
எனவே, இந்தக் கோயிலை மத்திய அரசு தனது பிரசாத் (யாத்திரை புத்துணர்ச்சி மற்றும் ஆன்மிக வளர்ச்சி இயக்கம்) திட்டத்தின் கீழ் புதுப்பித்துள்ளது. இக்கோயிலுக்காக, மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை ரூ.52 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளது.
இந்த தொகையில் அக்கோயிலின் 51 சக்திபீட பூங்காக்களில் நவீன வசதிகள் செய்து அழகுபடுத்தப்பட்டு உள்ளது. இந்த கோயில் ஆன்மிகத்தலமாக மட்டுமல்லாமல், திரிபுராவின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்தின் மறுமலர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தையும் உருவாக்கி உள்ளது.
இதன் தலவரலாறு குறித்து திரிபுர சுந்தரி கோயிலின் பண்டிதர்கள் கூறுகையில், ’கி.பி 1501 ஆம் ஆண்டில் மகாராஜா தன்ய மாணிக்யரால் கட்டப்பட்ட இந்தக் கோயில், துவக்கத்தில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
பிறகு, மகராஜாவின் ஒரு தெய்வீகக் கனவில், மாயா தெய்வம் மகாராஜாவை தனது மிக அழகான வடிவத்தில் இங்கே பிரதிஷ்டை செய்யுமாறு கட்டளை எழுந்தது. இதனால், திரிபுர சுந்தரி தெய்வத்தின் சிலையும் கோயிலில் நிறுவப்பட்டது. சக்தி மாதா உடலின் தெற்குப் பகுதி (வலது கால் விரல் உட்பட) இங்கு விழுந்ததாக நம்பப்படுகிறது.
இக்கோயில், ‘கூர்ம பீடம்’ என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில், கோயிலின் தளம் ஆமையின் நீட்டிய முதுகிற்கு ஒத்த ஒரு உயரமான மேட்டின் மீது அமைந்துள்ளது. இந்த இயற்கை அம்சம் தெய்வ வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பு தாந்த்ரீக நடைமுறைகளுக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது.’ எனத் தெரிவித்தனர்.
இக்கோயிலின் கட்டிடக்கலை வங்காளத்தின் ‘ஏக்-ரத்னா’ வகையாக உள்ளது. கோயிலின் அடிப்படை அமைப்பு, கட்டிடப் பொருத்துதல்கள் உட்பட பழைய கட்டிடக்கலை அம்சங்களைக் காட்டுகிறது.
திரிபுர சுந்தரி கோயிலினுள், திரிபுர சுந்தரி தேவியின் சுமார் ஐந்து அடி உயர சிலை காணப்படுகிறது. ‘சோட்டி மா’ என்று அழைக்கப்படும் சுமார் இரண்டு அடி உயரமான ஒரு சிறிய சிலையும் உள்ளன. அரசாட்சிகளின் போது, போர் அல்லது வேட்டையின் போது இப்பகுதியின் மன்னர்கள் சோட்டி மா சிலையை உடன் எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது.
இதுகுறித்து திரிபுராவின் முதல்வர் மாணிக் சாஹா சமூக ஊடக தளமான எக்ஸில் கோயிலின் காட்சிப்பதிவுகளுடன் இட்ட பதிவில், ‘பிரசாத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மாதாவின் இந்த தலத்தின் புதிய உள்கட்டமைப்பு சிறப்பானது. மாதாவின் அருளால் ஆசீர்வதிக்கப்பட்ட இந்த அழகான வளாகம், தற்போதைய அரசாங்கத்தின் மாதாவின் மீதான ஆழ்ந்த பக்தியையும் நன்றியையும் பிரதிபலிக்கிறது. செப்டம்பர் 22 அன்று பிரதமர் நரேந்திர மோடியின் பிரமாண்டமான திறப்பு விழாவுக்காக திரிபுராவின் முழு மக்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.’ எனக் குறிப்பிட்டார்.
இந்த கோயிலுக்காக மத்திய அரசின் மறுவடிவமைப்பிற்கான மொத்த செலவு ரூ.52 கோடிக்கும் அதிகமாகும். இத்துடன் திரிபுரா மாநில அரசு தோராயமாக ரூ.7 கோடி செலவிட்டுள்ளது. இக்கோயிலின் மறுசீரமைப்பு திரிபுராவில் சுற்றுலாவை அதிகரித்து, புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், உள்ளூர் வணிகங்களை அதிகரிக்கும் வாய்ப்புகளும் வலுவாக அமைந்துள்ளன.