மூலவர்: வெற்றி வேலாயுதன் அம்பாள்: வள்ளி, தெய்வானை தல வரலாறு: அகத்தியர், நாரதர், தேவர்கள் அனைவரும் முருகப் பெருமானை தரிசிக்கச் சென்றனர். அகத்தியர் ஓரிடத்தில் நின்று, முருகப் பெருமானுக்கு பூஜைகள் செய்ய நினைத்தார். ஆனால் பூஜைக்கு வேண்டிய நீர் கிடைக்கவில்லை. முருகப் பெருமானை வேண்டியதும், அவர் அகத்தியர் முன் தோன்றி, தன் வேலை தரையில் ஊன்றினார். நீர் பெருக்கெடுத்து ஓடியது. முருகப் பெருமானுக்கு பூஜைகள் நடைபெற்றன. ஊற்றுக் குழியில் இருந்து நீர் பெருகியதால், இப்பகுதி ‘ஊத்துக்குளி’ என்று அழைக்கப்படுகிறது.
சிறப்பு அம்சம்: அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. சூரபத்மனை வதம் செய்த பிறகு, முருகப் பெருமான் தனிமையில் இருந்தார். அவரை மணம் முடிக்க விரும்பிய பெண்கள், அவரது அருளாசியின்படி இந்திரனின் மகளாகவும் (தெய்வானை), நம்பிராஜனின் வளர்ப்பு மகளாகவும் (வள்ளி) அவதரித்தனர். திருமணத்துக்கு முன்னதான நிலை என்பதால் இவர்களுக்கு தனி சந்நிதி தரப்பட்டுள்ளது.
கோயில் அமைப்பு: குன்றின் மீது 5 நிலை கொண்ட ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முருகனின் கண தலைவரான இடும்பனுக்கு தனி சந்நிதி உள்ளது. முருகனின் கோயிலுக்கு கீழே தென்கிழக்கே பாம்பு புற்றுக்கு (சுப்புராயர்) தனி கோயில் உள்ளது. வள்ளி, தெய்வானை சந்நிதிக்கு செல்லும் வழியில் பாலை மரத்தடியில் காவல் தெய்வமான சுக்குமலையான் சந்நிதி உள்ளது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் சுக்கு மலையானை வழிபாடு செய்வது வழக்கம்.
பிரார்த்தனை: திருமணத் தடை நீங்க, பிரிந்த தம்பதி ஒன்று சேர, முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அமைவிடம் : திருப்பூரில் இருந்து (15 கிமீ) ஊத்துக்குளி வழியாக ஈரோடு செல்லும் பேருந்துகளில் சென்றால், கதித்த மலை முருகன் கோயிலை அடையலாம். கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6-11, மாலை 5-8 மணி வரை.