சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மூலம் புரட்டாசி மாசத்தில் ஒருநாள் பெருமாள் கோயில்கள் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுவதாக சுற்றுலா துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆன்மிக சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆடி மாதத்தில் ஒருநாள் அம்மன் கோயில் சுற்றுலா நடத்தப்பட்டது. இந்த சுற்றுலா பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது.
இதைத் தொடர்ந்து, தற்போது சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் பெருமாள் கோயில்கள் தொகுப்பு சுற்றுலா திட்டம் செப்டம்பர் 17 முதல் புதன், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் காலை 8.30 மணிமுதல் இரவு 8.30 மணி வரை இயக்கப்படும்.
அதன்படி, சென்னையில் செயல்படுத்தப்படும் ஒருநாள் வைணவ கோயில் சுற்றுலா திட்டத்தில் 6 பெருமாள் கோயில்களையும் மற்றொரு திட்டத்தில் 7 பெருமாள் கோயில்களையும் தரிசிக்கலாம். இதேபோல், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களிலும் ஒருநாள் வைணவ கோயில் சுற்றுலா இயக்கப்படும்.
மேற்கண்ட சுற்றுலாக்களில் பயணிகளுக்கு மதிய உணவு, அனைத்து கோயில்களின் பிரசாதம், சிறப்பு விரைவு தரிசனம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாக்களுக்கு www.ttdconline.com என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044- 25333333, 25333444 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.