சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மானசரோவர் மற்றும் முக்திநாத்துக்கு ஆன்மிக பயணம் சென்று வருபவர்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கும், ராமேசுவரத்திலிருந்து காசிக்கும், அறுபடை வீடுகளுக்கும் பக்தர்கள் கட்டணமில்லாமல் ஆன்மிக பயணமாக அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில், இந்த ஆண்டு 2,000 பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கு ஆன்மிக பயணம் அழைத்து செல்லப்படுவர் என 2025-26-ம் நிதியாண்டுக்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் முதல்கட்டமாக நேற்று,இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 9 மண்டலங்களில் இருந்து பக்தர்கள் வைணவ கோயில்களுக்கு ஆன்மிக பயணம் அழைத்து செல்லப்பட்டனர்.
சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் இருந்து 70 பக்தர்கள் வைணவ கோயில்களுக்கு ஆன்மிக பயணம் புறப்பட்டு சென்றனர். இதேபோல், காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மண்டலங்களிலிருந்து மொத்தம் 500 பக்தர்கள் அந்தந்த பகுதியில் அமைந்துள்ள முக்கிய வைணவ கோயில்களுக்கு ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர்.