தஞ்சாவூர்: சித்திரைப் பெருவிழாவையொட்டி தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ‘ஆரூரா… தியாகேசா…’ என்று முழக்கமிட்டபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் கடந்த ஏப். 23-ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரைப் பெருவிழா தொடங்கியது. தொடர்ந்து, தினமும் காலை, மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, தேரில் தியாகராஜர்- கமலாம்பாள் எழுந்தருள, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆரூரா.. தியாகேசா.. என முழக்கமிட்டபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
இந்த தேருக்கு முன்னதாக விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்களும், தொடர்ந்து, நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் சப்பரங்களும் சென்றன. தேரோடும் வீதிகளில் மேலவீதியில் சந்து மாரியம்மன் கோயில், கொங்கணேஸ்வரர் கோயில், மூலை ஆஞ்சநேயர் கோயில், வடக்கு வீதியில் பிள்ளையார் கோயில், ரத்தினபுரீஸ்வரர் கோயில், குருகுல சஞ்சீவி கோயில், கீழ் வீதியில் கொடிமரத்து மூலை, விட்டோபா கோயில், மணிகர்ணிகேஸ்வரர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், தெற்கு வீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோயில், தெற்கு வீதி பிள்ளையார் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், காளியம்மன் கோயில் ஆகிய இடங்களில் தேர் நிறுத்தப்பட்டு, பக்தர்கள் தேங்காய், பழம் படைத்து பூஜை செய்தனர்.
போலீஸார் பாதுகாப்பு: நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், எஸ்.பி. ராஜராம், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் கண்ணன், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.