திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை காலை நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள், ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்று கோஷங்கள் முழங்க, கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது.
அதிகாலை 4 மணிக்கு 12-ம் கால யாகசாலை பூஜைகள், மகா தீபாராதனை நடந்து, யாகசாலையில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு கும்பங்கள் எடுத்து, கோயில் கோபுர விமான கலசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு விசேஷ பூஜைகள் நடந்தன. காலை 6.22 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
ராஜகோபுரம் கலசங்கள், மூலவர், வள்ளி, தெய்வானை கலசங்களுக்கு தந்திரி மற்றும் போத்திகளும், சுவாமி சண்முகர் மற்றும் பரிவாரமூர்த்தி கலசங்களுக்கு சிவாச்சாரியார்களும், பெருமாள் கலசங்களுக்கு பட்டாச்சாரியார்களும் புனித நீரால் அபிஷேகம் செய்தனர்.
அப்போது, ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்ற கோஷங்கள் விண்ணதிர்ந்தன. கும்பாபிஷேகம் முடிந்தவுடன் பெரிய ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
கோயில் கடற்கரை, ராஜகோபுரத்தின் முன்புறம் ஆகிய இடங்களில் இருந்து கும்பாபிஷேக விழாவை ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக நகர் முழுவதும் முக்கிய பகுதிகளில் 70 பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேக நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன.
3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேற்பார்வையில் பாதுகாப்பு பணிகள் நடைபெற்றன. மாநில சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் தலைமையில் சுமார் 6,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
செந்தமிழ் வேதங்கள்: யாகசாலை பூஜையின்போது வேதபாராயணம், 64 ஓதுவார் மூர்த்திகளை கொண்டு திருமுறை விண்ணப்பம் செய்யப்பட்டது. யாகசாலையில் தினமும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 12 பெண் ஓதுவார்கள் உட்பட 108 ஓதுவார் மூர்த்திகளை கொண்டு பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் செய்யப்பட்டன.
கடற்கரையில் குவிந்த பக்தர்கள்: கும்பாபிஷேகத்தை காண நேற்று முதல் திருச்செந்தூருக்கு பக்தர்கள் குவிந்தனர். அவர்களை போலீஸார் கடற்கரை பகுதிக்கு திருப்பிவிட்டனர். இதனால் அவர்கள் மறுநாள் கும்பாபிஷேகத்தை காண கடற்கரையில் இரவிலேயே இடம் பிடித்து அங்கேயே படுத்து தூங்கினர். மேலும், ராஜகோபுரம் முன்புறம் உள்ள பகுதியில் இடம் பிடித்த பக்தர்கள் அங்கேயே இரவு பொழுதை கழித்தனர்.
ஒளி வெள்ளத்தில் மின்னிய கோயில்: கும்பாபிஷேக நாளுக்கு முந்தைய இரவு ஒளி வெள்ளத்தில் மின்னியது சுப்பிரமணிய சுவாமி கோயில். யாக சாலைகள் வண்ண விளக்குகளால் காட்சியளித்தன. ராஜகோபுரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாக காட்சியளித்தது. கோயிலின் மேற்பகுதி முழுவதும் வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாக ஜொலித்தன.
கட்டணமில்லா பேருந்து சேவை: திருச்செந்தூர் கோயில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து பக்தர்களின் வசதிக்காக நகருக்குள் கட்டணமில்லா பேருந்து இயக்கப்பட்டது. அதேபோல், தற்காலிக பேருந்து நிலையங்களில் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மேலும், பெரிய எல்.இ.டி. திரைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
ஜப்பானிய முருக பக்தர்கள்: ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பாலகும்ப குருமுனி, தமிழ்நாட்டைச் சேர்ந்த கோவில்பிள்ளை சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 100 முருக பக்தர்கள் தமிழகத்தில் உள்ள ஆன்மிக தளங்களில் பயணம் மேற்கொண்டனர். இவர்கள் சென்னை, காஞ்சிபுரம், கும்பகோணம், புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்தனர். இவர்களில் 25 பேர் மட்டும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனர்.
அவர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்று கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர். அப்போது பாலகும்ப குருமுனி, முருகப்பெருமானின் பக்தி பாடல்களை பாட, அவருடன் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பக்தர்களும் சேர்ந்து பாடி, நடனமாடி வழிபட்டனர். இதை பார்த்த அங்கிருந்த பக்தர்கள், ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்களை வெல்கம் என ஆங்கிலத்தில் கூறி வரவேற்றனர். அதற்கு அவர்கள் ‘நன்றி’ என மழலைத் தமிழில் நன்றி கூறினர். அப்போது, கானா பாடகர் வேல்முருகன் அங்கு வந்து, முருகன் பக்தி பாடலை பாடினார். அவருடன் ஜப்பான் நாட்டு பக்தர்களும் சேர்ந்த பாடினர்.
அன்னதானத்தின் விரும்பிய உணவுகள்: திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு வருகை தந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பசியாற வசதியாக பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள், தனியார் அறக்கட்டளைகள் சார்பில் உணவு வழங்கப்பட்டது. திருச்செந்தூர் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள தோரண வாயில் வழியாக கோயிலுக்கு வரும் வழியில் கோவை அரண் அறக்கட்டளை சார்பில் பிரம்மாண்ட கொட்டகை அமைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது. அங்கு மொத்தம் 29 கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு கவுன்ட்டரிலும் வெவ்வேறு விதமான உணவு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இட்லி, உப்புமா, சாம்பார், சட்னி, சாதம், ரசம், தயிர், பொரியல், கூட்டு உள்ளிட்டவைக பரிமாறப்பட்டன. முன்னதாக உணவருந்த வந்த பக்தர்களுக்கு பாக்கு மட்டை தட்டு வழங்கப்பட்டது. அவர்கள் கீழே அமர்ந்து உணவருந்தும் வகையில் தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டு அங்கு மின் விசிறிகளும் பொருத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு கவுன்ட்டர்களிலும் என்ன உணவு வழங்கப்படுகிறது என்பது குறித்து மைக்கில் அறிவிப்பு வெளியிட்டனர். இதனால் பக்தர்கள் தங்களுக்கு தேவையான உணவை அந்தந்த கவுன்ட்டர்களுக்கு சென்று வாங்கி அருந்தினர்.
இதுபோல் சாலையோரங்களில் ஆங்காங்கே ஏராளமான தன்னார்வலர்கள் காலை முதல் இரவு வரை தொடர்ந்து உணவு வழங்கினர். பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்திடும் வகையில் அனைத்து இடங்களிலும் பாக்கு மட்டை தட்டு மற்றும் பேப்பர் தட்டுகளில் தான் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மேலும் சாப்பிடும் பக்தர்களுக்கு அங்கேயே தன்னார்வலர்கள் மூலம் டம்ளர்களில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
ரயில் நிலையத்தில் திரண்ட பக்தர்கள்: திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் திருநெல்வேலியில் இருந்து இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு, காலை 10.50 மணிக்கு திருச்செந்தூர் வந்தடைந்தது. மறுமார்க்கமாக காலை 11.20 மணிக்கு புறப்பட்டு, பகல் 12.55 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தை சேர்ந்தது. இதே போல், திருநெல்வேலி சந்திப்பில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்ட செந்தூர் விரைவு ரயில், காலை 7.15 மணி, 10.20 மணிக்கு புறப்பட்ட ரயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இதற்கிடையே, காலை 6.22 மணிக்கு கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் காலை 7.10 மற்றும் 10.10 மணிக்கு திருநெல்வேலிக்கு புறப்பட்ட பயணிகள் ரயிலில் இடம் பிடிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து 11.20 மணிக்கு திருநெல்வேலி- செங்கோட்டை சிறப்பு ரயில் புறப்பட தயாராக இருந்தது. அதே நேரத்தில், அடுத்த நடைமேடையில் பகல் 12.20 மணிக்கு புறப்பட வேண்டிய திருச்செந்தூர் – பாலக்காடு ரயிலும் வந்து நின்றது. இதனால் இந்த 2 ரயில்களிலும் அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, பாவூர்சத்திரம், தென்காசி, கோவில்பட்டி, மதுரை, பழனி, பொள்ளாச்சி ஆகிய ஊர்களுக்கு செல்ல இருந்த பக்தர்கள் டிக்கெட் வாங்க திரண்டனர்.
பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்ததால், 2 கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டு பயணச் சீட்டுகள் வழங்கப்பட்டன. ஆனாலும், கவுன்ட்டரில் இருந்து ரயில் நிலையத்துக்கு வெளியே வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் டிக்கெட் பெறுவதற்கு காத்திருந்தனர். இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே போலீஸார் அங்கு விரைந்து வந்து, கயிறு கட்டி மக்களை வரிசைப்படுத்தி டிக்கெட்டு எடுக்க அனுப்பினர்.
தூய்மைப் பணியாளர்களின் துரிதம்: திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்துக்காக குவிந்த பக்தர்களால் நகரில் முக்கிய சாலைகளில் பேப்பர்கள் உள்ளிட்ட குப்பைகள் சேர்ந்தன. காற்று அதிகமாக வீசியதால் குப்பைகள் சாலை முழுவதும் பறந்து கிடந்தன. இந்நிலையில், கும்பாபிஷேகம் முடிந்ததும் காலை 11 மணி முதல் மக்கள் கூட்டம் குறையத் தொடங்கியது. இதையடுத்து, திருச்செந்தூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் காலை 11.30 மணி முதல் சாலையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். காற்றில் ஆங்காங்கே பரவி கிடந்த குப்பைகளை சேகரித்து அகற்றினர். இதனால் சாலைகள் குப்பையின்றி சுத்தமாக காணப்பட்டன.