சிவகங்கை: கண்டதேவி தேரோட்டம் ஜூலை 8-ம் தேதி நடைபெறுகிறது. கடந்த ஆண்டைப் போல் அனுமதிச் சீட்டு (பாஸ்) இருந்தால் மட்டுமே தேர் வடம் பிடிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை தேவஸ்தானத்துககு பாத்தியப்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி ஆகிய 4 பகுதிகளைச் (நாடு) சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெறும். தேர் வடம் பிடித்து இழுப்பதில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினையால், கடந்த 1998-ம் ஆண்டு தேரோட்டம் நின்றது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் கடந்த 2002 முதல் 2006 வரை தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து கும்பாபிஷேகம், தேர் பழுது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து, 17 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து தரப்பினரும் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
இந்த ஆண்டு சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆனித் திருவிழா ஜூன் 30-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது. ஜூலை 8-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று தேவகோட்டை சார்-ஆட்சியர் அலுவலகத்தில் சார்-ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இதில், டிஎஸ்பி பார்த்திபன், அறநிலையத் துறை இணை ஆணையர் பாரதி, தேவஸ்தான மேலாளர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஜூலை 8-ம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டைப் போலவே அனைத்து சமூகத்தினரும் பங்கேற்கும் வகையில் தேர் வடம் பிடித்து இழுக்க டிஎஸ்பி அலுவலகம் மூலம் அனுமதிச் சீட்டு வழங்கப்படும். அனுமதிச் சீட்டு பெற்றவர்கள் அதிகாலை 5 மணிக்குள் கோயிலுக்கு வந்துவிட வேண்டும்.
சாதி ரீதியான அடையாளங்கள், ஆடைகள் அணியக் கூடாது. வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை மட்டுமே அணிய வேண்டும். சாதி ரீதியான துண்டு கொண்டுவரக் கூடாது. வடம் பிடித்து இழுப்போரின் ஆதார் அட்டை நகல், செல்போன் எண்ணுடன் ஜூன் 24-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைபிடிகக்க வேண்டுமென கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.