சேலம் மாநகரின் மையத்தில், திருமணிமுத்தாற்றின் கரையின் மீது கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன், சேலத்தில் கோட்டை அமைத்து ஆட்சி செய்த சேர சிற்றரசர்கள், அந்தக் கோட்டையில் பெரிய மாரியம்மனை பிரதிஷ்டை செய்து, வழிபட்டு வந்தனர்.
அன்று முதல் சேலத்தின் காவல் தெய்வமாக, கோட்டை பெரிய மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.
கோட்டை பெரிய மாரியம்மன், தனது சிரசில் அக்னி சுவாலையால் ஒளி வீசும் கிரீடத்தை அணிந்து, தனது நாற்கரங்களில் நாக உடுக்கை, பாசாங்குசம், திரிசூலம், கபாலம் ஆகியவற்றை ஏந்தி, கம்பீரமாக வீற்றிருக்கிறாள்.
தனது வலது காலைத் தொங்கவிட்டு, அதன் மீது இடதுகாலை யோகாசனமாக மடித்து, சிவசக்தியாக புன்முறுவல் பூத்த திருமுகத்துடன் தன்னைத் தேடி வருவோர்க்கு அருள்பாலித்து வருகிறாள். சேர சிற்றரசர்கள், போருக்கு புறப்படும் முன்னர் கோட்டை பெரிய மாரியம்மனை வணங்கி சென்று, வெற்றிகளைப் பெற்றதாக சொல்வதுண்டு.
அதைப் பின்பற்றி, இன்றளவும் சேலம் மக்கள் நினைத்தது நிறைவேற இங்கு வந்து வேண்டுகின்றனர். தங்களை இன்னலில் இருந்து காக்கும் தெய்வமாக கோட்டை பெரிய மாரியம்மனை கருதுகின்றனர்.
ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப் பண்டிகை, புகழ்பெற்றது. கோட்டை பெரிய மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல் தொடங்கிய பின்னரே மற்றஅம்மன் கோயில்களில் விழா தொடங்கும். ஆடித்திருவிழா நடைபெறும் 22 நாட்களும் சேலம் மாநகரம் முழுவதும் விழாக்கோலத்தில் திளைத்திருக்கும்.