பழநி: மார்ச் 29-ல் சூரிய கிரகணம் நிகழ்வு இந்தியாவில் தெரியாது என்பதால், பழநி முருகன் கோயிலில் வழக்கம் போல் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வானியல் நிகழ்வுகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை கிரகணங்கள். கிரகண காலங்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. அந்த வகையில் மார்ச் 29-ம் தேதி சனிக்கிழமை, இந்திய நேரப்படி பகல் 2.20 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கி, மாலை 4.17 மணி வரை நிகழ உள்ளது.
இந்நிகழ்வு இந்தியாவில் தெரியாது என்பதால், அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சூரிய அனுஷ்டானம் கிடையாது. எனவே, அன்றைய தினம் வழக்கம் போல் ஆறு கால பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் வழக்கம் போல் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக, சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தின் போது குறிப்பிட்ட நேரத்துக்கு பழநி முருகன் கோயிலில் அனைத்து சந்நிதிகளும் அடைக்கப்படும். பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கும் அனுமதி கிடையாது. கிரகணம் முடிந்து, பரிகார பூஜைக்கு பிறகே கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.