சேலம்: சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயிலின் வைகாசி விசாகத் தேரோட்டம் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்புடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
சேலத்தின் பழமை வாய்ந்த சுகவனேஸ்வர சுவாமி கோயிலில், வைகாசி விசாகப்பெருவிழா, கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு, தினமும் காலை மற்றும் மாலையில் சிறப்பு வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வந்தது. இந்நிலையில், திருவிழாவின் முக்கிய உற்சவமான வைகாசி விசாகத் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக, கோயிலில் சுகவனேஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மனுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் உற்சவ மூர்த்திகள் தேர்நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர், காலை 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர்.
பின்னர், தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில், மேயர் ராமச்சந்திரன், சேலம் எம்பி., செல்வகணபதி, அறங்காவலர் குழு தலைவர் வள்ளியப்பா உள்ளிட்டோர் வடம் பிடிக்க, காலை 9.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்கள் ஓம் நமச்சிவாய முழக்கத்துடன், தேரை வடம் பிடித்து இழுக்கத் தொடங்கினர்.
தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்ட தேர், பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் புடைசூழ, ஓம் நமச்சிவாய முழக்கங்களுக்கு நடுவே, வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி, லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், 2-வது அக்ரஹாரம், பட்டைக்கோயில், சின்னக்கடை வீதி, பெரிய கடை வீதி, கன்னிகா பரமேஸ்வரி கோயில், முதல் அக்ரஹாரம் வழியாக மீண்டும் தேர் நிலையை அடைந்தது.
தேரோட்டத்தை ஒட்டி, பாதுகாப்புக்காக தேர் வீதிகளில் இருந்த மின் கம்பங்களில் மின் கம்பிகள் கழற்றப்பட்டு, மின் விநியோகம் நிறுத்தப்பட்டு, தேர் நிலைக்கு வந்த பின்னர் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டது. இதனிடையே, தேரோட்டத்தை ஒட்டி, மாநகர போலீஸார் வழிநெடுகிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.