திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் நேற்று மாலையில் இருந்தே லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்லத் தொடங்கினர். கோயிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். விடிய விடிய பக்தர்கள் கிரிவலம் சென்ற நிலையில், கிரிவலப் பாதையில் தன்னார்வலர்கள், ஆன்மிக மடங்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
அடிப்படை வசதிகள்… இதையொட்டி பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சித்ரா பவுர்ணமி கிரிவலம் நேற்று இரவு 8.47 மணிக்குத் தொடங்கியது. இன்று (மே 12) இரவு 10.43 மணிக்கு நிறைவு பெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
இதையொட்டி, 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து கிரிவலப்பாதை வரை செல்ல தனியார் பேருந்துகள் மற்றும் தனியார் கல்லூரி பேருந்துகள் இலவசமாகக் காலவரையின்றி இயக்கப்படுகிறது. 73 இடங்களில் கார் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளன.
காவல் துறை உதவி தேவைப்படுவோர் 93636 22330 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொள்ளுமாறு காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த எண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் ‘Hello’ என்று தகவல் அனுப்பினால், தற்காலிக பேருந்து நிலையங்கள், கார் பார்க்கிங், கிரிவலப்பாதை செல்வதற்கான கூகுள் மேப் லிங்க் உள்ளிட்ட விவரங்களை அறியலாம்.
அதேபோல, காவலர்களின் நேரடி உதவி தேவைப்படுவோர் நாளை காலை 8 மணி வரை 04175-222303, 94981 00431 மற்றும் 91596 16263 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என்றும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலைக்கு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகளும் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்டன.