சென்னை: திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி மே.9-ம் தேதி ரத உற்சவம் நடைபெறுகிறது. திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன் பேட்டையில் மிகவும் பழமைவாய்ந்த பல வரலாற்று சிறப்புகளை உள்ளடக்கிய செண்பகாம்பிகை உடனுறை திருவேட்டீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாக்களில் சித்திரைப் பெருவிழா, பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பிக்கும் மிக முக்கியமான திருவிழாவாகும்.
மே 12 திருக்கல்யாணம்: அந்தவகையில், இந்த ஆண்டு சித்திரை பெருவிழா மே.3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மே.1-ம் தேதி கிராம தேவதை பூஜையும், 2-ம் தேதி விநாயகர் உற்சவமும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான அதிகார நந்தி சேவை நேற்று முன் தினம் காலை 6.30 மணிக்கு நடந்தது.
அதனை தொடர்ந்து, புதன், பூதகி, சிம்ம வாகன வீதி உலாவும், 4-ம் நாள் திருவிழாவில் (நேற்று) புருஷாமிருக சேவை, நாகவாகன சேவையும் நடைபெற்றன. மே 7-ம் தேதி (இன்று) பவழக்கால் விமான சேவை, ரிஷப வாகன சேவையும், மே.8-ம் தேதி பல்லாக்கு சேவை, யானை வாகன சேவையும், விழாவின் முக்கிய நிகழ்வான ரத உற்சவம் 7-ம் நாள் திருவிழாவான மே.9-ம் தேதியும் நடைபெறுகிறது.
மே.10-ம் தேதி பன்னிரு திருமுறை திருவீதி உலா, அறுபத்து மூவர் நாயன்மார்களுடன் கயிலயங்கிரி விமான சேவை நிகழ்ச்சியும், மே. 12-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், அதனை தொடர்ந்து தீர்த்தவாரி, மே.13-ம் தேதி பந்தம் பறி உற்சவமும் நடைபெறுகிறது.