குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நவ. 17-ல் தொடங்கி டிச. 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக நவ. 16-ல் கோயில் நடை திறக்கப்பட உள்ளது. ஒரு மண்டலம் விரதமிருந்து ஐயப்பனை தரிசனம் செய்ய ஏராளமாள பக்தர்கள் ஆர்வம் காட்டி வருவதால் மண்டல, மகர பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர். இதையொட்டி, பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன. இதற்கான ஆலோசனைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் தேவசம் அமைச்சர் வி.என்.வாசவன் தலைமையில் நடைபெற்றது.
இதுகுறித்து தேவசம் போர்டு செயலர் எம்.ஜி.ராஜமாணிக்கம் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: பக்தர்கள் தற்போது ஆன்லைன் மூலம் சேவைகளைப் பெற்று வருகின்றனர். அவர்கள் வசதிக்காக ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய, பலமொழி தகவல் தொடர்பு செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதில், தரிசனம், தங்கும் வசதி, அவசரத் தேவை, மருத்துவ வசதி, காலநிலை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். அதில் உள்ள எண்களில் தொடர்பு கொண்டும் பலனடையலாம்.

