தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரி வழிபாட்டுக்காக சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. பல்வேறு வழிபாடுகளுக்கு பிறகு நேற்று இரவு கோயில் நடை சாத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நெல் அறுவடை தொடங்கும் காலங்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரி வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான பூஜை நேற்று நடைபெற்றது. இதற்காக, அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் நேற்று முன்தினம் நெற்கதிர்கள் கொண்டுவரப்பட்டன. பம்பை கணபதி கோயிலில் சிறப்பு வழிபாட்டுக்குப் பிறகு 18-ம் படி வழியே ஐயப்பன் சந்நிதிக்கு தலைச்சுமையாகக் கொண்டு வரப்பட்டன.
தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ராஜீவரு ஆகியோர் தலைமையில் இந்த நெற்கதிர்கள் பெறப்பட்டன. தொடர்ந்து கொடி மரத்துக்கு கிழக்கே உள்ள மண்டபத்தில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நேற்று சிறப்பு பூஜைகள் செய்தார். பின்பு ஐயப்பன் சந்நிதியில் நெற்கதிர்கள் வைக்கப்பட்டு, பூஜைகள்செய்யப்பட்டன.
பின்னர், அவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. பல்வேறு வழிபாடுகளுக்குப் பிறகு நேற்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. அடுத்ததாக ஆக. 16-ம் தேதி மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்படும் என்று தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.