தேனி: சபரிமலையில் மாதாந்திர வழிபாட்டுக்காக வரும் 14-ம் தேதி மாலை நடை திறக்கப்பட உள்ளது. இதற்காகத் தரிசன ஆன்லைன் முன்பதிவுகள் தொடங்கி உள்ளன.
ஐயப்பன் சிலை பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சபரிமலையில் ஒருநாள் வழிபாட்டுக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து இன்று (ஜூன் 5) அதிகாலை முதல் வழக்கமான வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. சிறப்புப் பூஜைகளுக்குப் பின்பு இன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட உள்ளது.
இந்நிலையில், மாதாந்திர (மிதுனம்) வழிபாட்டுக்காக வரும் 14-ம் தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து 5 நாட்களுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பின்பு 19-ம் தேதி இரவு நடை சாத்தப்படும். இதற்கான ஆன்லைன் முன்பதிவுகள் தொடங்கின. கேரளாவில் தற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால் அங்குத் தொடர் மழை பெய்து வருகிறது. இப்பருவத்தில் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் பக்தர்கள் பலரும் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.