தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 30-ம் தேதி நிறைபுத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. இதற்காக புதிய நெற்கதிர்கள் ஆபரணப்பெட்டியில் வைத்து தலைச்சுமையாக சபரிமலைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த வழிபாட்டுக்காக தற்போது ஆன்லைன் தரிசனம் முன்பதிவுகள் தொடங்கி உள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக கடந்த 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. 5 நாள் தொடர் வழிபாட்டுக்குப் பிறகு நேற்று (ஜூலை 21) இரவு நடைசாத்தப்பட்டது. இந்நிலையில் நிறைபுத்திரி தரிசனத்துக்காக வரும் 29-ம் தேதி மாலை நடைதிறக்கப்பட்டு 30-ம் தேதி ஒருநாள் வழிபாடு நடைபெற உள்ளது. இந்நாளில் புதிய நெற்கதிர்கள் ஐயப்பன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். பின்பு அவை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும்.
தேவசம்போர்டு அதிகாரிகள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் நெல் அறுவடை பருவத்தில் இந்த பூஜை நடைபெறும். விவசாயம் செழிக்கவும், நாட்டின் வளம் பெருகவும் இந்த வழிபாடு மேற்கொள்ப்படுகிறது. இதற்காக திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான செட்டிகுளக்கரையில் உள்ள வயல்களில் விளைந்த நெற்கதிர்கள் அச்சன்கோயிலுக்கு கொண்டு வரப்படும். அங்கு சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு சபரிமலை சந்நிதானத்துக்கு தலைச்சுமையாக எடுத்துச் செல்லப்படும்.
இந்த நெற்கதிர் கட்டுகள் பட்டு வஸ்திரம் சுற்றப்பட்டு அலங்கரிக்கப்பட்ட திரு ஆபரணப்பெட்டியில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். பம்பை கணபதி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு பின்பு பஞ்ச வாத்தியங்கள் முழங்க சந்நிதானத்துக்கு கொண்டு செல்லப்படும். அங்கு தேவசம்போர்டு அதிகாரிகள் இதனை பெற்றுக் கொள்வர்.
நெற்கதிர்கள் கருவறையில் வைத்து பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்றனர்.கேரளாவில் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தரிசனத்துக்கு வருபவர்கள் குடை உள்ளிட்ட மழை பாதுகாப்பு உபகரணங்களை கொண்டு வர வேண்டும். நீலிமலை பாதை வழுக்கும் தன்மை உள்ளதால் சுப்பிரமணிய பாதையில் பக்தர்களை அனுமதிக்க தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.