‘ஹரியும், ஹரனும் ஒன்றே’ என்ற தத்துவத்தை உணர்த்த இருவரையும் வேண்டி அன்னை பார்வதிதேவி தவமிருந்த தலம் சங்கரன்கோவில். இத்தலத்தில் கோமதி அம்மனாக அன்னை வீற்றிருக்கிறாள். திருமாலும், சிவபெரு மானும் இணைந்து, சங்கரநாராயணராக ஒரே ரூபமாக காட்சி தர வேண்டி, கோமதி அம்மன் தவத்தில் இருந்தாள்.
ஆடி மாதம் பவுர்ணமி திதி உத்திராட நட்சத்திர தினத்தில் அன்னை கோமதிக்கு சங்கரநாராயண தரிசனம் கிட்டியது. இதை உணர்த்தும் விதமாக இங்கே ஆடித்தபசு பிரம் மோற்சவம் நடைபெறுகிறது. இவ்விழாவில் அன்னை கோமதிக்கு தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டு, 10 நாட்கள் காலையிலும், மாலையிலும், இரவிலும், அன்னை வீதி உலா வருகிறாள்.
11-ம் நாள் சங்கரநாராயண கோலத்தில் இறைவன் அருள்பாலிக்கிறார். இது அன்னையின் சஹஸ்ராரம் விழுந்த தலம். அன்னை இங்கே மஹா யோகினியாக, தபஸ் ஸ்வரூபிணியாக அருள்பாலிக்கிறாள் . அம்மன் சந்நிதியின் முன்பு ஆக்ஞா சக்கரம் பதிக்கப்பட்டுள்ளது. மனநிலை சரியில்லாதவர்கள், துர்சக்தியால் பீடிக்கப்பட்டவர்கள் இந்த சக்கரத்தின் மேல் அமர்ந்து குணமடைந்து செல்கின்றனர்.
இங்கு வழங்கப்படும் கோமதி அம்மனின் புற்றுமண் பிரசாதத்தை உண்டால் வயிற்று வலி மற்றும் உடல் வியாதிகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலுக்குள், தனி தங்கக் கொடிமரம், தனி நந்திதேவர், தனி பலிபீடத்துடன் கோமதி அம்மன் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சுவாமிக்கு நடக்கும் அத்தனை பூஜை உபசரணைகளும் அம்மனுக்கும் நடக்கின்றன. பள்ளியெழுச்சி பூஜை முடிந்த பின் பெரிய தீபாராதனை அம்மனுக்கே முதலில் நடக்கிறது.