விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கிராமத்தில் உலக பிரசித்திப் பெற்ற கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று (மே 14) வெகு விமரிசையாக நடைபெற்றது. அரவான் களப்பலி கொடுக்கப்பட்டதும், தாலியை அறுத்து விதவை கோலத்தில் திருநங்கைகள் ஒப்பாரி வைத்து அழுதனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா, கொடியேற்றம் மற்றும் சாகை வார்த்தலுடன் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி தொடங்கியது. சுவாமி உற்சவம் தினசரி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக அரவான் சுவாமி திருக்கண் திறத்தல் மற்றும் திருநங்கைகள், பக்தர்கள் ஆகியோர் மாங்கல்யம் ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு நேற்று (மே 13) நடைபெற்றது.
இதில் பங்கேற்ற, தமிழகம் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரண்டிருந்த ஆயிரக்கணக்கான திருநங்கைகள், அரவான் சுவாமியை தனது கணவராக ஏற்றுக் கொண்டு, கோயில் பூசாரிகள் கையில் தாலிக் கட்டிக் கொண்டனர். பட்டு புடவை, முகூர்த்த சேலை, கைகளில் வளையல் அணிந்தும், தலையில் பூக்களை சூடி மணப்பெண்ணாக அலங்கரித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் ஆண்கள் உள்ளிட்ட பக்தர்களும், கோயில் பூசாரி கையில் தாலியை கட்டிக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து கோயிலில் உள்ள அரவான் சிரசுக்கு இன்று(மே 14) அதிகாலை முதல் மாலை அணிவித்து, ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கோயிலின் வடக்கே நிலை நிறுத்தப்பட்டிருந்த சகடையில் 30 அடி உயர கம்பம் நட்டு, வைக்கோல் சுற்றப்பட்டது. பின்னர், 3 கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புஜங்கள், மார்பு பதக்கம், அரசிலை, பாதம், கைகள், கயிறு, கடையாணி உள்ளிட்டவற்றை கொண்டு சுவாமி அரவானின் உருவம் வடிவமைக்கப்பட்டன.இதையடுத்து தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள், திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பக்தர்களின் வெள்ளத்தில், கோயிலை சுற்றி உள்ள 4 மாட வீதிகளில் வலம் வந்த திருத்தேர், பின்னர் நிலை நிறுத்தப்பட்டது. திருத்தேர் மீது விளை பொருட்களை வீசியெறிந்து விவசாயிகள் வேண்டிக் கொண்டனர். மேலும் திருநங்கைகள் மற்றும் பக்தர்களும் பூக்களை வீசினர். நாணயங்களும் வீசப்பட்டன. மேலும், சூடம் ஏற்றி, தேங்காயை சூரைவிட்டும், பக்தர்கள் வழிபட்டனர். தேரோட்டம் நிறைவு பெற்றதும், அழிகளம் நோக்கி திருத்தேர் புறப்பட்டது. திருத்தேரை பின்தொடர்ந்து திருநங்கைகள் ஒப்பாரி வைத்தபடி, ஓடினர்.
நத்தம் கிராமம் பந்தலடி எனப்படும் அழிகளத்துக்கு திருத்தேர் சென்றதும், அரவான் களப்பலி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. கணவர் அரவான் கொல்லப்பட்டதை அறிந்த திருநங்கைகள், பூசாரிகளின் கைகளால் தாலியை அறுத்து கொண்டும், கையில் அணிந்திருந்த வளையல்களை உடைத்தும், நெற்றியில் இருந்த திலகத்தை அழித்துவிட்டு, கிணற்றில் தலைமூழ்கினர். பின்னர் அவர்கள், வெள்ளை சேலையை உடுத்தி விதவை கோலத்தை ஏற்றனர். தங்க தாலியை, கோயிலுக்கு காணிக்கையாக செலுத்தினர். மேலும் அவர்கள், குழுக்களாக இணைந்து, ஒப்பாரி வைத்து அழுதுபுலம்பி, சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
இதன்தொடர்ச்சியாக, பந்தலடி தெய்வநாயகம் தோப்பில் பலி சாதம் படையலிடப்பட்டன. பின்னர், இரவு 7 மணியளவில் அரவான் உயிர்ப்பிக்கும் நிகழ்வு, ஏரிக்கரை காளிக் கோயிலில் நடைபெறும். பின்னர், பந்தலடிக்கு திருத்தேர் கொண்டு வரப்பட்டு, அதன்பிறகு, அரவான் சிரசு மட்டும் சிறப்பு அலங்காரத்துடன் நத்தம், தொட்டி, கூவாகம் கிராமம் வழியாக, கோயிலுக்கு கொண்டு வரப்படும். சுவாமிக்கு தீபாராதனை காண்பித்து பக்தர்கள் தரிசனம் செய்வர்.
17-வது நாளான நாளை (மே 15) விடையாத்தி உற்சவமும், 18-வது நாளான வெள்ளிக்கிழமை ( மே 16) தர்மர் பட்டாபிஷேகமும் நடைபெற்றதும், சித்திரை திருவிழா நிறைவு பெறும். இந்த விழாவையொட்டி ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சித்திரை திருவிழாவை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.