தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நள்ளிரவு கடற்கரையில் நடைபெற்றது. விரதம் கடை பிடித்து வேடம் அணிந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
தசரா திருவிழா: இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா மிகவும் விமரிசியைாக நடைபெறும். இக்கோயிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத் துடன் தொடங்கியது. தொடர்ந்து காப்பு கட்டி விரதம் கடைபிடித்த பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து கடந்த 10 நாட்களாக வீதி தோறும் சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனர்.
குலசேகரன்பட்டினம் கோயிலில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறு திருக்கோலங்களில், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மகிஷா சூரசம்ஹாரம்: விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம் நள்ளிரவு கோயில் அருகே உள்ள கடற்கரையில் நடந்தது. இதை காண நேற்று மாலையில் இருந்தே பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் குலசேகரன் பட்டினத்துக்கு வரத் தொடங்கினர். சுவாமி தரிசனம் செய்ய வசதியாக கோயிலில் பக்தர்கள், தசரா குழுவினர் செல்வதற்கு தனியாக பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. குலசேகரன்பட்டினம் புறவழிச் சாலையின் அருகில் உள்ள தருவைகுளம் நேற்று காலை முதலே வாகனங்களால் நிரம்பியது.
தசரா திருவிழாவில் 10-ம் நாளில், காலை 6 மணி, மற்றும் 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், 10.30 மணிக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றது. இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு மேல் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரரேஸ்வரர் கோயில் முன்பாக அம்மன் எழுந்தருளி பல்வேறு வேடங்களில் வந்த மகிஷாசூரனை வதம் செய்தார்.
அப்போது கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர ‘தாயே முத்தாரம்மா’, ‘ஓம் காளி, ஜெய்காளி’, ‘வெற்றி அம்மனுக்கே’ என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். பின்னர் கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரர் கோயில், அபிஷேக மேடை மற்றும் கோயில் கலையரங்கில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
நாளை நிறைவு: நாளை (அக்.3ம் தேதி) காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப் பரத்தில் திருவீதியுலா புறப்படுகிறார். மாலை 4 மணிக்கு அம்மன் கோயிலை வந்தடைந்தவுடன் பக்தர்கள் காப்பு அவிழ்த்து தங்கள் வேடங்களை களைந்து விரதத்தை நிறைவு செய்கின்றனர். நாளை நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறு கிறது.
தசரா விழாவை முன்னிட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. குலசேகரன்பட்டினத்தில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை நேற்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
நெல்லை சரக டிஐஜி (பொறுப்பு) சந்தோஷ் ஹாதிமணி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் தலைமையில் 3,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.