நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் சில இடங்களில் இன்று முன்னதாகவே வளைகுடா நாடுகளை பின்பற்றி பக்ரீத் சிறப்பு தொழுகை மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில் சில பகுதிகளில் வளைகுடா நாடுகளை பின்பற்றி முன்னதாகவே பக்ரீத், ரம்ஜான் கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாளை முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை, கொண்டாட்டங்களில் ஈடுபடவுள்ளனர். இந்நிலையில், இஸ்லாமிய வளைகுடா நாடுகளை பின்பற்றி கேரள மாநிலத்தின் சில இடங்கள், மற்றும் குமரி மாவட்டத்தில் முஸ்லிம்களின் ஒரு பகுதியினர் ஒருநாள் முன்னதாகவே பக்ரீத் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் இளங்கடை அல்மஸ்ஜிதுல் அஷ்ரஃப் பள்ளிவாசலில் இன்று காலை பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். இதைப்போல் திருவிதாங்கோடு, அழகியமண்படம், திட்டுவிளை, குலசேகரம் பகுதியிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். அதேநேரம் குமரி மாவட்டத்தில் பெரும்பாலான முஸ்லிம்கள் நாளை பக்ரீத் கொண்டாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.