குடியாத்தம்: குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் ‘அம்மன் சிரசு ஊர்வலம்’ நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம் சிரசு திருவிழா நேற்று நடைபெற்றது. குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி 1-ம் தேதி சிரசு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான சிரசு திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 11-ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும், நேற்று முன்தினம் தேர்த்திருவிழாவும் விமரிசையாக நடைபெற்றது. முக்கிய விழாவான சிரசு திருவிழா நேற்று நடைபெற்றது.
இவ்விழாவையொட்டி, நேற்று அதிகாலை 4 மணிக்கு பிச்சனூர்பேட்டை, நடுப்பேட்டை பகுதிகளில் இருந்து அம்மனுக்கு சீர்வரிசை, பட்டுப்புடவை ஆகியவை கொண்டு வரப்பட்டு தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
அதிகாலை, அம்மன் சிரசு ஊர்வலம் புறப்பட்டது. சிரசு ஊர்வலம் சென்ற தெருக்களில் மயிலாட்டம், கரகாட்டம், புலியாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம் நடைபெற்றது. லட்சணக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் சிரசு ஊர்வலம் நடைபெற்றது. இதை காண வேலூர் மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் திரண்டனர்.
சிரசு ஊர்வலம் சென்ற தெருக்களிலும் அதை சுற்றியுள்ள தெருக்களிலும் நடக்க முடியாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குடியாத்தம் சிரசு ஊர்வல திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் கட்டுக்கடங்காத கூட்டம் நேற்று குடியாத்தம் பகுதியில் காணப்பட்டது.
பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் சிரசு ஊர்வலம் சென்ற தெருக்களில் ஆயிரக்கணக்கான சூறைத் தேங்காய்களை உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல், நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. குடியாத்தம் நகரின் முக்கிய தெருக்களின் வழியாக சென்ற சிரசு ஊர்வலம் இறுதியாக கோயிலை சென்றடைந்தது.
கோயிலில் அம்மன் சிரசு மண்டபத்தில் உள்ள 7 அடி உயர சண்டாளச்சி உடலில் கெங்கையம்மன் சிரசு பொருத்தப்பட்டது. அப்போது, அம்மனை தரிசிக்க சென்ற பக்தர்களை விழாக்குழுவினர் அம்மனை காண முடியாத வகையில் மறைத்து நின்றனர். இதனால், ஆத்திரமடைந்த பக்தர்கள் விழாக்குழுவினரை கண்டித்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அம்மனுக்கு கூழ் வார்த்தல், அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 8 மணியளவில் சண்டாளச்சி அம்மன் உடலில் இருந்த சிரசு எடுக்கப்பட்டு கவுண்டன்யா ஆறு, ராஜேந்திரசிங் தெரு, ஆழ்வார் முருகப்ப முதலி தெரு, சுண்ணாம்புபேட்டை பகுதி வழியாக சென்று சுண்ணாம்புபேட்டை சலவை படித்துறையில் சிரசு ஊர்வலம் முடிவடைந்தது. இதையொட்டி, நேற்றிரவு வாண வேடிக்கை நடைபெற்றது.