தேனி: குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடி மாத சனி வழிபாட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தேனி மாவட்டத்தில் இருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ள குச்சனூரில் சனீஸ்வர பகவான் கோயில் அமைந்துள்ளது. இங்கு சுயம்புவாக சனீஸ்வர பகவான் எழுந்தருளிய கோயில் என்பதால் இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது. முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் சுயம்பு சனீஸ்வர பகவானுக்குள் ஐக்கியம் என்பதால் ஆறு கண்களுடன் மூலவர் காட்சி அளிக்கிறார். இக்கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத சனிக்கிழமைகளில் நடைபெறுவது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.
கோயில் நிர்வாகம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஆடி மாத சனி பகவானுக்கு உகந்த வழிபாடு என்பதால் அதற்கான ஏற்பாடுகள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது.
பக்தர்களுக்காக தற்போது நிழற்கூரை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் பக்தர்கள் வரிசையில் செல்வதற்கான பாதை அமைக்கப்பட உள்ளது. அதிக பக்தர்கள் வர இருப்பதால், அவர்களுக்கான அடிப்படை வசதி, சிறப்பு பேருந்து இயக்கம், தற்காலிக பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, விழா தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், திருவிழாவுக்கு தடை என்பதால் கொடியேற்றம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகளுக்குத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்றபடி ஆடி மாத சனி பகவான் வழிபாடுகள் வழக்கம் போல நடைபெறும்” என்று அதிகாரிகள் கூறினர்.