கிருஷ்ணகிரி அருகே புதிதாகக் கட்டப்பட்ட வெக்காளியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நேற்று நடந்தது. இதையொட்டி, கோயில் பூசாரி தேர்வு நடந்தது. இதில், பாரம்பரிய வழக்கப்படி, ‘மைசூர் காளை’ மூலம் கோயில் பூசாரியாக 22 வயது இளைஞர் தேர்வானார்.
கிருஷ்ணகிரி அருகே மேலுமலை ஊராட்சிக்கு உட்பட்ட சாம்பல்பள்ளம் கிராமத்தில் சுயம்பு முனீஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அருகே கிராம மக்கள் சார்பில், வெக்காளியம்மன் கோயில் புதிதாகக் கட்டப்பட்டு குடமுழுக்கு விழா நேற்று நடந்தது. இதையொட்டி, கடந்த 5 நாட்களாக மங்கள இசை, மகா கணபதி பூஜை, ஹோமம், கொடி ஏற்றம், கலசங்களில் புனித நீர் எடுத்து வருதல், கோ பூஜை, வாஸ்து பூஜை, யாக சாலை பூஜைகள், பால்குடம் ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை குடமுழுக்கு விழா நடந்தது.
தொடர்ந்து, கோயில் பூசாரி தேர்வுக்குக் கிராம மக்கள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், 25-க்கும் மேற்பட்டவர்களிடம் போட்டி ஏற்பட்டது. இதனால், தங்கள் பாரம்பரிய வழக்கப்படி காளை மூலம் பூசாரியைத் தேர்வு செய்ய முடிவு கிராம மக்கள் முடிவு செய்தனர். இதற்காகக் கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து காளை வரவழைக்கப்பட்டிருந்தது. அக்காளைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.
பின்னர், அங்குள்ள மாரியம்மன் கோயிலிலிருந்து காளையை ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வந்தனர். பூசாரிக்கு போட்டியிட விரும்பிய 25 பேர் கோயில் முன்பு உள்ள திடலில் அமர வைக்கப்பட்டனர். கோயிலை 3 முறை சுற்றி வந்த காளை, பூசாரி தேர்வுக்காக திடலில் அமர்ந்திருந்தவர் களின் ஒவ்வொருவரின் அருகே சென்று நீண்ட மூச்சு வாங்கியது. பின்னர்
கவுதம் (22) என்ற இளைஞர் அருகே சென்று அவரை 3 முறை சுற்றி வந்து அவரை தொட்டப்படி நின்றது. இதையடுத்து, அவர் பூசாரியாகத் தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தனர். இதையடுத்து, பூசாரியாகத் தேர்வு செய்யப்பட்ட இளைஞர் கோயிலில் முறைப்படி அம்மனுக்கு பூஜைகள் செய்தார்.
இதுதொடர்பாக கிராம மக்கள் கூறும்போது, “கோயில் பூசாரி தேர்வுக்கு கிராமத்தைச் சேர்ந்த பலர் விரும்பியதால், எங்கள் பாரம்பரிய வழக்கப் படி காளை மாடு மூலம் பூசாரியை தேர்வு செய்துள்ளோம். கோயில்களில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியி ல் இதற்காக பிரத்யேகமாக காளைகள் வளர்க்கப்படுகின்றன. எங்கள் கிராமத்தில் பூசாரியைத் தேர்வு செய்வதில் பிரச்சினை ஏற்பட்டதால் மைசூர் காளையை அழைத்து வந்து தேர்வு செய்தோம்” என்றனர்.
குடமுழுக்கு விழா மற்றும் பூசாரி தேர்வு நிகழ்ச்சியில் சாமல்பள்ளம் மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.