காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவின் மிகச் சிறப்பு மிக்க நிகழ்வான, பக்தர்கள் மாங்கனிகளை வீசி இறைத்து இறைவனை வழிபடும் பிச்சாண்டவர் வீதியுலா இன்று (ஜூலை 10) நடைபெற்றது.
சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில், காரைக்கால் கைலாசநாத சுவாமி, நித்ய கல்யாணப் பெருமாள் கோயில்களில் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட காரைக்கால் அம்மையார் கோயிலில் ஆண்டு தோறும் மாங்கனித் திருவிழா சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டுக்கான விழா கடந்த 8-ம் தேதி ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோயிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு வைபவத்துடன் தொடங்கியது. நேற்று காலை அம்மையார் கோயிலில் புனிதவதியார்- பரமதத்தர் திருக்கல் யாணம், இரவு கைலாசநாதர் கோயிலில் பிச்சாண்டவர் வெள்ளை சாற்றி புறப்பாடு நடைபெற்றது. இன்று அதிகாலை கைலாசநாதர் கோயிலில் பிச்சாண்டவர், பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனைக் காட்டப்பட்டது.
தொடர்ந்து பரம தத்தர் காசுக்கடை மண்டபத்துக்கு (கடைத்தெரு பொய்யாதமூர்த்தி விநாயகர் கோயில்) வரும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் சிறப்பு மிக்க நிகழ்வான பிச்சாண்டவர் வீதியுலா நடைபெற்றது. இதனையொட்டி சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் கையில் மாங்கனியுடன், கைலாசநாதர் கோயில் வாயிலில் பவழக்கால் சப்பரத்தில் எழுந்தருளினார்.
பின்னர் காலை 9.30 மணியளவில் கைலாசநாதர் கோயில் வாயிலிருந்து வீதியுலா புறப்பாடு தொடங்கியது. வேதபாராயணங்கள் முழங்க, சிவபெருமானுக்குரிய ராஜ வாத்தியங்கள் இசைக்க வீதியுலா நடைபெற்றது. கைலாசநாதர் கோயில் வீதி, பாரதியார் சாலை, மாதா கோயில் வீதி, லெமர் வீதி வழியாக மாலை வரை நடைபெறும் வீதியுலாவில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கையில் மாங்கனி, பட்டு வஸ்திரம், பூக்கள் உள்ளிட்டவற்றுடன் தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று இறைவனை தரிசித்து சென்றனர்.
வீதியுலாவின் போது பவழக் கால் சப்பரம் ஒர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நகர்ந்த பின்னர், பின்னால் இருக்கும் சாலைகள், வீடுகள், கடைகள் மற்றும் மாடிப் பகுதிகளில் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக மாங்கனிகளை வீசி இறைத்து இறைவனை வழிபட்டனர். அந்த மாங்கனிகளை இறைவனுக்குப் படைக்கப்பட்ட பிரசாதமாகக் கருதி, ஏராளமான பக்தர்கள் அவற்றை பிடித்து தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
இதனால் திருமணத் தடை, குழந்தை பேறின்மை போன்ற பல இன்னல்கள் நீங்கி தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வீசி எறியப்பட்ட மாங்கனிகளை முதியவர்கள், சிறார்கள், இளைஞர்கள், பெண்கள், என அனைத்துப் தரப்பினரும் போட்டி போட்டுக் கொண்டு பிடித்தனர்.
இவ்விழாவில் புதுச்சேரி அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன், புதுச்சேரி டிஐஜி சத்திய சுந்தரம், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சவுஜன்யா, நிர்வாக அதிகாரி (கோயில்கள்) கு.அருணகிரி நாதன், கைலாசநாதர் கோயில் நிர்வாக அதிகாரி ஆர்.காளிதாசன், உபயதாரர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை தரிசித்தனர். மாலை காரைக்கால் அம்மையார் கோயிலில் அமுது படையல் நிகழ்வு நடைபெறுகிறது.