தஞ்சாவூர் அருகேயுள்ள காசவளநாடுபுதூர் கிராமத்தில், இந்து மக்கள் மொஹரம் பண்டிகையை கொண்டாடி, தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காசவளநாடுபுதூர் கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் இந்துக்களாக இருந்தாலும், அவர்கள் 300 ஆண்டுகளுக்கு மேலாக மொஹரம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதற்காக 10 நாட்கள் விரதம் இருந்து, ஊரின் மையப்பகுதியான செங்கரையில் உள்ள சாவடியில், அல்லா சுவாமி என்ற பெயரில் உள்ளங்கை போன்ற உருவத்தை வைத்து, தினமும் பூஜைகள் நடத்தி, பாத்தியா ஓதி வழிபாடு நடத்துவர்.
இதன்படி, மொஹரத்துக்காக நிகழாண்டு 10 நாட்கள் விரதம் இருந்த இந்து மக்கள், நேற்று முன்தினம் இரவு உள்ளங்கை உருவத்துக்கு மாலை அணிவித்து வீதியுலாவாக ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் சென்றனர்.
அப்போது, வீடுகளில் இருந்த மக்கள், அல்லா சுவாமிக்கு புதுமண் கலயத்தில் பானகம், அவல், தேங்காய், பழங்கள் வைத்தும், நேற்று காலை எலுமிச்சை, ரோஜா மாலைகள், பட்டுத் துண்டு சாத்தியும் வழிபட்டனர். அப்போது, அல்லா சுவாமியுடன் வந்த முஸ்லிம்கள், பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினர்.
வீதியுலா முடிந்து செங்கரை சாவடிக்குத் திரும்பியதும், அல்லா சுவாமியை சுமந்து சென்றவர்கள் முதலில் தீக்குண்டம் இறங்கினர். அவர்களைத் தொடர்ந்து விரதம் இருந்த கிராம மக்கள் அனைவரும் தீக் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதுகுறித்து காசவளநாடு கிராம மக்கள் கூறியது: எங்கள் கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு குளம் வெட்டப்பட்டபோது, உள்ளங்கை உருவத்தில் உலோகம் கிடைத்தது. அதை அல்லாவின் கையாக கருதி கோயில் அமைத்து வழிபாடு செய்து வருகிறோம். இவ்விழாவை நாங்கள் கொண்டாடும்போது முஸ்லிம்களும் பங்கேற்று வருகின்றனர்.
மேலும், ஊரில் இந்து மக்கள் அதிகம் இருப்பதால், இந்து முறைப்படியே வீதியுலா, தீக்குண்டம் இறங்குவது போன்ற வழிகளில் வழிபாட்டு செய்கிறோம். 300 ஆண்டுகளுக்கும் மேலாக மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில், இந்துக்கள்- முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் இருந்து மொஹரத்தை கிராம விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம் என்றனர்.