மதுரை: கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா நாட்களில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.1 கோடி செலுத்தி உள்ளனர்.
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா மே 8–ம் தேதி முதல் மே 17-ம் தேதி வரை நடந்தது. இதில் கள்ளழகர் மதுரைக்கு மே 10-ம் தேதி புறப்பட்டபோது அவருடன் 39 தள்ளு வண்டி உண்டியல்கள் வந்தன. இதில் வழி நெடுகிலும் பக்தர்கள் காணிக்கைகளை உண்டியல்களில் செலுத்தினர்.
பின்னர் மே 16-ம் தேதி கள்ளழகர் மலைக்கு திரும்பினார். அவருடன் 39 தள்ளுவண்டி உண்டியல்களும் கோயிலுக்கு திரும்பின. அந்த வகையில் சித்திரைத் திருவிழாவில் மட்டும் பக்தர்கள் செலுத்திய காணிக்கை உண்டியல்கள் எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
கோயில் துணை ஆணையர் யக்ஞ நாராயணன் தலைமையில் கூடலழகர் கோயில் உதவி ஆணையர் பிரதீபா முன்னிலையில் .காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ஆய்வர் சாவித்திரி, கோயில் கண்காணிப்பாளர்கள் பாலமுருகன், அருணாதேவி, பிஆர்ஓ முருகன் மற்றும் அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள், வங்கிப் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் காணிக்கையாக ரூ.1 கோடியே 6 லட்சத்து 78 ஆயிரத்து 47 ரொக்கம், 9 கிராம் நகைகள், 55 கிராம் வெள்ளிப்பொருட்கள் கிடைக்கப்பெற்றன.