கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள கதிராமங்கலத்தில் உள்ளது வனதுர்க்கை அம்மன் கோயில். தமிழக அளவில் வனதுர்க்கையம்மன் மூலவராக அருள் பாலிப்பது இங்கு மட்டுமே. சிறப்பு பெற்ற இந்த வனதுர்க்கை அம்மன், நவதுர்க்கை அம்மன் கோயில்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
சிவன், பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்களுக்கு தொடர்ந்து எல்லையில்லா துன்பங்களை தந்த அசுரர்களை அழிக்கவும், இடைவிடாது பூஜித்த மும்மூர்த்திகளின் துன்பங்களை போக்கவும், ஆதிபராசக்தி இளம்பெண் ணாகத் தோன்றி துர்க்கையின் அம்சத்தைப் பெற்று அசுரர்களை அழித்தார். அவரே இங்கு வனதுர்க்கையாக காட்சியளிக்கிறார்.
இந்த அம்மன் தினந்தோறும் இரவில் காசிக்குச் சென்று வருவதாகவும், இதேபோல் அகஸ்தியரும், மார்க்கண்டேயரும் இங்கு வந்து அம்மனை தரிசிப்பதாகவும் கூறப்படுகிறது. பிற கோயில்களில் உள்ள துர்க்கை அம்மன் வடக்கு நோக்கி, சிம்மம் அல்லது மகிஷா வாகனத்தில் அருள்பாலிப்பதுண்டு. ஆனால் இங்கே, வனதுர்க்கை கிழக்கு நோக்கி பத்ம பீடத்தில் காட்சியளிக்கிறார்.
மேலும், அம்மன் தன் வலது கையை சாய்த்து அபயஹஸ்தம், வரதம் என இரு முத்திரைகளைக் காட்டி அருள்பாலிப்பது வேறு எந்தக் கோயில்களிலும் இல்லாத தனிச்சிறப்பாகும். நாள்தோறும் ராகு காலத்தில் இங்குள்ள அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தங்களது குலதெய்வம் தெரியாத பக்தர்கள், இந்த அம்மனை குலதெய்வமாக நினைத்து வழிபட்டுச் செல்கின்றனர்.
குடும்ப விருத்திக்காக சந்தன அபிஷேகம், எதிரிகளின் தொந்தரவு நீங்க குங்கும காப்பு, செவ்வரளி அர்ச்சனை செய்தும் அம்மனை வழிபட்டு வருகின்றனர். திருமணத் தடைகள் மற்றும் கடன்கள் நீங்கவும், குடும்பப் பிரச்சினைகள் தீரவும், காரிய சித்தியடையவும் இந்த வனதுர்க்கை அம்மனை பிரார்த்தனை செய்து வருகின்றனர்.