குமுளி: சித்திரை முழுநிலவு தினத்தை முன்னிட்டு கண்ணகி கோயில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. சிவப்புப் பட்டு உடுத்திய கண்ணகி, சிலம்பு ஏந்தியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் தமிழகம், கேரளாவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையான கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையின் விண்ணேற்றிப்பாறை எனும் இடத்தில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. மதுரையை எரித்துவிட்டு வைகை ஆற்றங்கரை வழியே தலைவிரி கோலமாக வந்த கண்ணகிக்கு, கோவலன் மங்கலநாண் பூட்டி விண்ணுக்கு அழைத்துச் சென்றதாக ஐதீகம். இதனால் கணவனை இழந்தாலும் மங்கலதேவி கண்ணகி என்ற பெயரில் இத்திருத்தலம் அழைக்கப்படுகிறது.
இக்கோயிலுக்கு தமிழகத்தின் கூடலூர் அருகேயுள்ள பளியன்குடி வழியாக 6.6 கி.மீ. தொலைவு நடைபாதை வழியாகவும், கேரளாவின் குமுளி, கொக்கரகண்டம் வழியாக 14 கி.மீ. ஜீப் பாதை வழியாகவும் செல்லலாம்.
கோயில் அமைந்த இடம் வனப்பகுதி என்பதால் சித்திரை மாத முழுநிலவன்று ஒருநாள் மட்டும் வழிபாட்டுக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இங்கு கண்ணகிக்கு சிதிலமடைந்த சிலையே இருப்பதால் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலையில் அம்மனுக்கு உருக்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கண்ணகி பிறந்த ஊரான காவிரிபூம்பட்டினத்தில் இருந்து பிறந்த வீட்டு சீதனமாக புனிதநீர் கொண்டு வரப்பட்டு கண்ணகிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு அம்மன் சிவப்பு பட்டு உடுத்தி சிலம்பை கையில் ஏந்தியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தமிழக, கேரள பக்தர்கள் அதிகளவில் கலந்துகொண்டு வளையல், மங்கலநாண் வழங்கி வழிபட்டனர்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பொங்கல் வைத்தல், பால்குடம் எடுத்தல், அட்சய பாத்திரத்தில் உணவு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கண்ணகியின் சிறப்பைக் கூறும் வகையில் வில்லுப்பாட்டு உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தமிழக நடைபாதை… வனப்பகுதியின் நுழைவாயிலில் இருந்து கோயில் வரை நான்கு இடங்களில் வனத்துறை சார்பில் சோதனைச் சாவடி அமைத்து பிளாஸ்டிக், சிகரெட் மற்றும் தீப்பற்றக்கூடிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஆண்டைவிட பக்தர்கள் அதிகம் வந்திருந்தால், ஜீப் பாதையில் கடும் நெரிசல் காரணமாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
“ஒவ்வோர் ஆண்டும் கேரள வனப் பாதையிலே பக்தர்கள் அதிகளவில் செல்ல வேண்டியுள்ளது. இதனால் அம்மாநில அதிகாரிகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். எனவே, தமிழகத்தின் வழியே உள்ள நடைபாதையை அகலப்படுத்தி, ஜீப்களை இயக்க வேண்டும். இதன் மூலம் மாதந்தோறும் வழிபாடுகளை மேற்கொள்ள முடியும்” என்று பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அமைச்சர் சேகர்பாபு ஆய்வு: இதற்கிடையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விழாவில் கலந்துகொண்டு, தமிழகப் பாதையான பளியன்குடி வழியே பாதை அமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்தினார். அவர் கூறும்போது, “பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஆய்வின்படி, கண்ணகி கோயில் தமிழக எல்லையில்தான் உள்ளது. தமிழக எல்லையான பளியன்குடி வழியே பாதை அமைக்க உரிய ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.
நிகழ்ச்சியில், ஆட்சியர் ரஞ்ஜீத்சிங், அறநிலையத் துறை ஆணையர் ஸ்ரீதர், தேனி எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன், எம்எல்ஏக்கள் என்.ராமகிருஷ்ணன், ஆ.மகாராஜன், சரவணக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.