மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்திரை பதிக்கும் விழாவான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கி எழுந்தருளும் வைபவம் இன்று காலை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால், மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 8-ல் தொடங்கியது. முதல் நாள், இரண்டாம் நாள் மாலையில் சுந்தரராஜ பெருமாள் தோளுக்கினியானில் எழுந்தருளினார். மூன்றாம் நாளான நேற்று முன்தினம் காலையில் தோளுக்கினியானில் சுந்தரராஜபெருமாள்திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.
பின்னர் கண்டாங்கி பட்டு உடுத்தி,நெற்றிப்பட்டை, கரங்களில்வளைத்தடி, நேரிக்கம்பு பரிவாரங்களடன் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப்பல்லக்கில் மதுரைக்குப் புறப்பட்டார். கோயில் ராஜகோபுர வாசலிலுள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி சந்நிதியில் தீபாராதனை நடந்தது.
அன்றிரவு பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி பகுதியிலுள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி அப்பன்திருப்பதி ஜமீன்தார் மண்டபத்தில் தங்கினார். அதிகாலை ஒரு மணியளவில் சுந்தரராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் கடச்சனேந்தல் வழியாக மதுரை மாநகர எல்லையான மூன்றுமாவடிக்கு நேற்று அதிகாலை 4 மணியளவில் வந்தடைந்தார் கள்ளழகர்.
மதுரை மூன்று மாவடியில் கள்ளழகரை வரவேற்க பல்லாயிரக்கணக்கான மக்கள் விடிய விடிய காத்திருந்தனர். கள்ளழகரைப் பார்த்ததும் பக்தி பரவசமடைந்து கோவிந்தா, கோவிந்தா என முழக்கங்களை எழுப்பியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் கள்ளழகரை வரவேற்றனர்.
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்கள் கூட்டம் கூட்டமாக மதுரை மாநகரை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
இரவு 8 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு அவருக்கு இரவு 11.30 வரை திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டார். கோயிலில் இருந்து புறப்பாடாகி தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இன்று காலை 5.45 மணிமுதல் 6.05 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். அப்போது அங்கு திரண்டிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருளாசி தந்துவிட்டுகாலை 7.25 மணியளவில் வையாளியாகி வீரராகவப் பெருமாளுக்கு மாலை சாற்றிவிட்டு அங்கிருந்து ராமராயர் மண்டகப்படிக்கு புறப்படுகிறார். அங்கு பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து கள்ளழகரை குளிர்விக்கின்றனர். இரவில் வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் தங்குகிறார். நாளை மே 13-ல் தேனூர் மண்டகப்படியில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதாரம் நடைபெறும்.