சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில், மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா செப்.22-ம் தேதி முதல் 10 நாட்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து, இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உலகில் தீமைகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டும் சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணர்த்தும் தொடர்நிகழ்வாக கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா, இந்து சமய அறநிலையத் துறை சார்பில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் மாபெரும் கொலுவுடன் செப்.22-ம் தேதி முதல் அக்.1-ம் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது.
ஒவ்வொரு நாளும் மாலையில் சிறப்பு வழிபாடும், இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. நவராத்திரி விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக, செப்.22-ம் தேதி விநாயகர் அகவல் மற்றும் அபிராமி அந்தாதியுடன் சுசித்ரா பாலசுப்பிரமணியத்தின் பக்தி இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
இதையடுத்து, நாள்தோறும் ஒரு வழிபாட்டுடன், எச்.சூரியநாராயணன், அருணா மற்றும் அன்பு குழுவினரின் பக்தி இசை, மாலதி, முத்துசிற்பி மற்றும் கீர்த்தனாஸ் குழுவினரின் பக்தி இசை, தேசிய விருது பெற்ற ஆர்.காஷ்யப மகேஷ் குழுவினரின் பக்தி இசை, நாட்டிய சிரோன்மணி உமா தினேஷ் – சாய் முத்ரா நடன குழுவினரின பரத நாட்டியம் நடைபெறுகிறது.
மேலும், ரிஷிப்ரியா குருபிரசாத் குழுவினரின் பக்தி இசை, தேச மங்கையர்க்கரசியின் ஆன்மிக சொற்பொழிவு, நிருத்ய நாட்டியாலயா மற்றும் ஸ்ரீஞானமுத்ரா அகாடமி குழுவினரின் பரதம், சியாமளா, சஜினி மற்றும் ரிதம் குழுவினரின் பக்தி இசை, வேல்முருகன், சுமதிஸ்ரீ ஆகியோரின் பக்தி களஞ்சியம், விநாயகா நாட்டியாலயாவின் பரதம், கோபிகா வர்மாசின் மோகினி ஆட்டம், வீரமணி ராஜு குழுவினரின் பக்தி இசை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.