மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவின் 9-ம் நாளான இன்று பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் பேச்சியம்மன் படித்துறை அருகிலுள்ள புட்டுத்தோப்பு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலை முன்னிட்டு கோயிலிலிருந்து காலை 6 மணியளவில் வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பட்டனர். நான்கு சித்திரை வீதிகள், கீழ மாசி வீதி, யானைக்கல் வழியாக ஆதி சொக்கநாத கோயில், திருமலை ராயர் படித்துறை, அனுமார்கோயில் படித்துறை, வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் எழுந்தருளி பேச்சியம்மன் படித்துறை வழியாக பிட்டுத்தோப்பு மண்டபத்தில் எழுந்தளி, பின்பு வாணிய வைசியர் மண்டபத்தில் எழுந்தருளினர்.
அங்கு பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நடைபெற்றது. பிட்டுக்கு மண் சுமந்த அலங்காரத்தில் பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் அருள்பாலித்தனர். அங்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன், திருவாதவூர் மாணிக்கவாசகர் சுவாமியும் எழுந்தருளினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு பக்தர்களுக்கு பிட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர் மாலை 6 மணியளவில் அங்கிருந்து வெள்ளி ரிஷப வாகனங்களில் புறப்பாடு நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து 10-ம் நாளான நாளை (செப்.4) விறகு விற்ற திருவிளையாடல் நடைபெறவுள்ளது.
பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்: ”வைகையாற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தை அடைக்க வீட்டிற்கொருவர் வர வேண்டும் என்று மன்னர் ஆணையிட்டார். அப்போது பிட்டு விற்கும் கிழவியான வந்தி, தனக்கு யாரும் இல்லையே என்று எண்ணி இறைவனிடம் வேண்டினார். அப்போது சிவபெருமானே, கூலியாள் வடிவில் வந்து, வந்திக்கிழவி தந்த பிட்டுக்காக மண் சுமக்கிறேன் என்று கூறினார். ஆனால் தன் பங்குக்கு கரையை அடைக்காமல் பிட்டு உண்டுவிட்டு. ஆடிப்பாடி, ஆழ்ந்து உறங்கினார்.
அப்போது அங்கு வந்த மன்னன், தன் கையிலிருந்த பிரம்பால் வேலை பார்க்காமல் உறங்கிக்கொண்டிருந்த கூலியாள் முதுகில் அடித்தார், அடித்த அந்த அடி அனைத்து உலக உயிர்கள் முதுகிலும் அடி விழுந்தது. அப்போது மன்னன் தாம் அடித்தது இறைவன் என்னும் உண்மையை உணர்ந்தான். இறைவன் அசரீரியாக தோன்றி, மாணிக்க வாசகர் பெருமையை உணர்த்தவும், வந்திக்கு சிவலோக பதவி தருவதற்காகவும், தாம் இவ்வாறு செய்வதாக மன்னனுக்கு உரைத்தார். மன்னனும் மாணிக்க வாசகரை இறைபணிக்கு விடுவித்து. தானும் சிவலோக பதவியை தக்க காலத்தில் அடைந்தான்.