திருவாரூர்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் உள்ள குரு பகவான் சந்நிதியில் நேற்று குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நவக்கிரகங்களில் ஒன்றான குரு பகவான் நேற்று பிற்பகல் 1.19 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் பெயந்தார். அதன்படி, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் உள்ள குரு பகவான் சந்நிதியில் நேற்று குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதையொட்டி, குரு பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பிறப்கல் 1.19 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

குரு பகவானுக்கு நேற்று நடைபெற்ற
மகா தீபாராதனை.படம்: ஆர்.வெங்கடேஷ்
குரு பெயர்ச்சியையொட்டி, மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்காக கோயிலில் வரும் 15-ம் தேதி முதல் மே 22-ம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெறவுள்ளது.
இதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் உள்ள குரு பகவான் சந்நிதியில் நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி, கோயில் செயல் அலுவலர் சு.அசோக்குமார், தக்கார் ரா.விக்னேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர். குரு பெயர்ச்சியின் தொடர்ச்சியாக கோயிலில் வரும் 23-ம் தேதி லட்சார்ச்சனையும், 24, 25-ம் தேதிகளில் சிறப்பு பரிகார ஹோமமும் நடைபெற உள்ளது.