திருத்தணி: ஆனி கிருத்திகையை ஒட்டி நேற்று திருத்தணி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து, நாள்தோறும் திரளான பக்தர்கள் வந்து, முருகனை வணங்கி செல்கின்றனர்.
இதில், கிருத்திகை நாட்கள், வார விடுமுறை நாளான ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில், கிருத்திகை மற்றும் வார விடுமுறை நாளான நேற்று வழக்கத்துக்கு மாறாக அதிகாலை முதலே அதிகளவிலான பக்தர்கள் கோயிலில் குவிய தொடங்கினர்.
ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள், பொதுதரிசனம் மற்றும் சிறப்பு தரிசன வழிகளில், சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக கோயிலுக்கு செல்லும் மலை பாதையில், தனியார் பேருந்துகள், வேன்கள், கார்கள் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் நேற்று அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில், கோயில் நிர்வாகம் சார்பாக செல்லும் பேருந்துகள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
மேலும், பக்தர்கள் அதிகளவில் குவிந்ததையடுத்து, சுமார் 100 போலீஸார் முருகன் கோயில் வளாகம், மலைப்பாதை மற்றும் படிக்கட்டுகள் உள்ளிட்ட இடங்களில் நேற்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு வள்ளி, தெய்வானை சமேதராய் சுப்பிரமணிய சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் மாட வீதியில் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.