ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கொடியேற்றத்தின் போது, பட்டர்கள் மற்றும் பரிசாரகர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பிரசித்தி பெற்ற ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. பரத்வாஜ் பட்டர் பூஜைகள் செய்து கொடியேற்றினார். கொடியேற்றிய பின் கொடிமரத்தில் தர்ப்பை புல் கட்டுவதற்காக பத்ரி நாராயண பட்டர் கொடிமரத்தின் மீது ஏறினார். அப்போது ஸ்தானிகம் ரமேஷ் மகன் பிரசன்னா கொடிமரத்தில் ஏறியதற்கு, பட்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
கொடி மரத்தின் மேல் நின்ற பிரசன்னாவை பிடித்து பட்டர்கள் கீழே இழுத்தனர். இதனால் பட்டாச்சாரியார்கள் மற்றும் பரிசாரகர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறும் சூழல் உருவானது. பட்டாச்சார்யர்கள் தான் அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்ய வேண்டும், பரிசாரகர்கள் பூஜைகளுக்கு தேவையான உதவிகள் தான் செய்ய வேண்டும் என பட்டர்கள் கூறினர்.
அதன்பின் கொடியற்றிய பரத்வாஜ் பட்டரின் தந்தை வாசுதேவ பட்டர் கொடி மரத்தில் ஏறி தர்ப்பை புல் கட்டினார். அப்போது மணியம் அம்பி மகன் கிரி கொடிமரத்தில் ஏறியதற்கு வாசுதேவ பட்டரும், பட்டாச்சார்யார்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், செயல் அலுவலர் சர்க்கரையம்மாள் கீழே இறங்க கூறியதை அடுத்து கிரி கீழே இறங்கினார். தொடர்ந்து இரு தரப்பும் செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர் குழுவில் புகார் அளித்தனர்.