நிலக்கோட்டை: ஆடி மாத சப்தாகம் பூஜைக்காக கேரள மாநிலம் சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்துக்கு நிலக்கோட்டையில் இருந்து நாள்தோறும் தொடுக்கப்பட்ட மலர்களை பக்தர் ஒருவர் காணிக்கையாக அனுப்பி வருகிறார்.
கேரள மாநிலம் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு கடந்த 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை சப்தாகம் பூஜை எனும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இந்த விசேஷ நாட்களில் ஆலயத்தில் சரஸ்வதி, காளி, துர்க்கை மூன்று அவதாரங்களில் சோட்டானிக்கரை பகவதி அம்மன் காட்சியளிக்கிறார். அம்மன் ஆலயத்தை ஏழு நாட்களுக்கும் அலங்கரிக்க திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இருந்து சுகந்தா கரிகால பாண்டியன் என்ற பக்தர் நாள்தோறும் 500 கிலோ அளவிலான மலர்களை மாலையாக தொடுத்து கோயிலுக்கு நேத்திக்கடனாக அனுப்பி வைக்கின்றார்.
பட்டு ரோஸ், செவ்வந்தி, செண்டு மல்லி உள்ளிட்ட விரைவில் வாடாத மலர்களை மலர் சந்தையில் கொள்முதல் செய்து 20-க்கும் மேற்பட்ட மாலை கட்டும் தொழிலாளர்களை கொண்டு வண்ண வண்ண கதம்பம் மாலைகளாக கட்டி அதனை லாரிகள் மூலம் சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்துக்கு அவர் அனுப்பி வைக்கின்றார்.
சுகந்தா கரிகால பாண்டியன் கூறுகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் நலன் வேண்டியும், அவர் நாட்டு மக்களுக்கு சிறந்த தொண்டு ஆற்றிட வலிமை பெற வேண்டியும். பகவதி அம்மனுக்கு மலர்களை அனுப்புவதாக தெரிவித்தார்.