சென்னை: ஆடிக் கிருத்திகையை ஒட்டி, வடபழனி முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர். மற்ற மாதங்களில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தை விட, ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மிகவும் விசேஷமானது. இந்த ஆண்டு ஆடி மாதத்தில் ஜூலை 20-ம் தேதி, ஆக. 16-ம் தேதி என 2 முறை கிருத்திகை நட்சத்திரம் வருகிறது.
அந்த வகையில், முதல் ஆடிக் கிருத்திகை நாளான நேற்று அனைத்து முருகன் கோயில்களும் விழாக்கோலம் பூண்டிருந்தன. சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதனால் அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னையை பொருத்தவரை வடபழனி முருகன் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் ஆடிக் கிருத்திகை விழா வெகு விமரிசையாக நடைபெறும். வடபழனி முருகன் கோயிலில் நேற்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு பள்ளியறை பூஜைகள் நடந்தன. காலை 5 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை சந்தனக்காப்பு அலங்காரம், உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது.
பிற்பகல் 1 மணிமுதல் மாலை 4 மணிவரை மூலவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சாயரக் ஷை பூஜை, அபிஷேகம் முடிந்ததும் மாலை 5 மணிமுதல் இரவு 11 மணிவரை புஷ்ப அங்கி அலங்காரத்தில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து இரவு, வள்ளி, தேவசேனா சமேதராக சுப்பிரமணிய சுவாமி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை முதலே வடபழனி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தர்கள், பால் குடம் ஏந்தி, காவடி எடுத்து, அலகு குத்தி வேண்டுதலை நிறைவேற்றினர். முதியோர், கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு சுவாமி தரிசனம் செய்ய தனி வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. அதேபோல் காவடி, பால் குடம், அலகு குத்தி வரும் பக்தர்களுக்கும் தனி வழி அமைக்கப்பட்டிருந்தது.
விழாவையொட்டி போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதேபோல பாரிமுனை கந்தகோட்டம், குரோம்பேட்டை குமரன்குன்று, குன்றத்தூர் முருகன், பெசன்ட்நகர் அறுபடை வீடு முருகன், வானகரம் மச்சக்கார சுவாமிநாத பாலமுருகன் ஆகிய கோயில்களிலும் ஆடிக் கிருத்திகையையொட்டி சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன.
ஆக.16-ம் தேதி வரும் ஆடிக் கிருத்திகை நாளில் முருகன் கோயில்களில் நேற்றைய தினத்தை விட பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகமாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.