ராமேசுவரம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் சிறப்பு ரயில், பேருந்துகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தாண்டு ஆடி அமாவாசை வரும் வியாழக்கிழமை (ஜூலை 24) கடைபிடிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். 9 மணியளவில் பர்வதவர்த்தினி அம்பாள் தங்கப்பல்லக்கில் வீதி உலா முடிந்து, ராமநாதபுரம் சமஸ்தான மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். 11 மணியளவில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஸ்ரீராமர், சீதா மற்றும் லட்சுமணருடன் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கி அருள்பாலிப்பர்.
இரவு 8 மணியளவில் தீபாராதனை முடிந்து தங்க ரிஷப வாகனத்தில் பர்வதவர்த்தினி அம்பாள் வீதி உலா நடைபெறும். அக்னி தீர்த்தக்கடற்கரையில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ராமநாதபுரம் மாவட்டம் சேதுகரை, தேவிப்பட்டிணம் கடற்கரைகளிலும் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிப்படுவார்கள்.
சிறப்பு ரயில், பேருந்துகள்: ஆடி அமாவாசையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் இயக்குகிறது. இதன்படி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06711) மதுரையில் இருந்து 23.07.2025 புதன்கிழமை நள்ளிரவு 11.15 மணியளவில் 24.07.2025 அதிகாலை 02.30 மணிக்கு ராமேசுவரத்தை வந்தடையும்.
மறுமார்க்கத்தில் ராமேசுவரத்திலிருந்து முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06712 ) வியாழக்கிழமை அதிகாலை 03.00 மணியளவில் ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு, காலை 6 மணிக்கு மதுரைக்கு வந்தடையும். இந்த ரயில்கள் மதுரை கிழக்கு, திருப்புவனம், மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் நின்று செல்லும் என மதுரைக் கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து ராமேசுவரத்துக்கு நாளை (ஜூலை 23) கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மறுமார்க்கமாக, சென்னை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பெங்களூரு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இருமார்க்கத்திலும் சேர்த்து மொத்தம் 200-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்காக, www.tnstc.in மற் றும் tnstc official app மூலமாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.