தேனி: ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் வீரபாண்டி பெரியாற்றங்கரையில் முன்னோர்களுக்கான தர்ப்பண வழிபாட்டில் ஈடுபட்டனர். பின்பு அன்னதானம் வழங்கி கோயில்களில் வழிபாடு செய்தனர்.
இந்துக்களின் முன்னோர் வழிபாடாக ஆடி அமாவாசை இருந்து வருகிறது. இந்நாட்களில் கடற்கரை, ஆற்றங்கரை மற்றும் பல்வேறு நீர்நிலைகளில் பொதுமக்கள் நீராடி தங்கள் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வது வழக்கம். இதன் மூலம் மூதாதையர்களின் ஆன்மா சாந்தி அடைந்து, அவர்களின் ஆசி குடும்பத்துக்கு கிடைப்பதுடன், சந்ததியும் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை.
இதன்படி தேனி மாவட்டத்தில் வீரபாண்டி முல்லை பெரியாற்றங்கரையில் இன்று (ஜூலை 23) ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்தனர். ஆற்றில் நீராடி பின்பு தங்கள் முன்னோர்களுக்கான வழிபாடுகளை மேற்கொண்டனர். இதற்காக மூதாதையர்களுக்கு பிடித்த உணவுகளை படையலிட்டு எள், சோற்றுடன் பிண்டங்களாக ஆற்றில் கரைத்தனர். தொடர்ந்து யாசகர்களுக்கு அன்னதானம், கால்நடைகளுக்கு கீரைகளை வழங்கினர். பின்பு கண்ணீஸ்வரமுடையார், கவுமாரியம்மன் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் வாகனங்களில் உணவுகளை கொண்டு வந்து பக்தர்களுக்கு தானம் அளித்தனர். இது குறித்து புரோகிதர்கள் கூறுகையில், தர்ப்பணமும், திவசமும் வெவ்வேறு வழிபாடு ஆகும். தர்ப்பணம் என்பது மூதாதையர்களை திருப்தி செய்வதுடன் நீரை அவர்களுக்கு அளித்து அருளைப் பெறுவது ஆகும். இதற்காக அமாவாசையில் எள்ளும், நீரும் கலந்து வழிபாடு செய்யப்படுகிறது.
திவசம் என்பது இறந்தவர்கள் எந்த மாதம் எந்த திதியில் இறந்தார்களோ அந்த திதியில் மேற்கொள்ளப்படும் வழிபாடு ஆகும். இன்று(ஜூலை 24) ஆடி அமாவாசை என்பதால் வீரபாண்டியில் ஏராளமானோர் வந்து தர்ப்பணம் செய்தனர் என்றனர். இதேபோல் சுருளி அருவி, தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன், கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி முருகன் கோயில், போடி காசிவிசுவநாதர் ஆலயம், உப்புத்துறை மாளிகைப்பாறை கருப்பசாமி கோயில், ஜம்புலிபுத்தூர் கதலிநரசிங்கப்பெருமாள் கோயில், ஆண்டிபட்டி வேலப்பர் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.