புதுச்சேரி: வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயில் முழுக்க ஏசி மயமாகிறது.
சுற்றுலா நகரான புதுச்சேரியில் முக்கிய கோயில்களில் ஒன்று மணக்குள விநாயகர் கோயில். கடற்கரை அருகே நகரப் பகுதியில் அமைந்துள்ள இந்தத் திருக்கோயிலில் நாள்தோறும் பக்தர்கள் தரிசனம் செய்வர். புதுச்சேரியில் பொதுமக்கள், வர்த்தகர்கள் என பலரும் ஒவ்வொரு நாளும் இந்தத் திருக்கோயிலுக்கு வருவது வழக்கம். இந்தக் கோயில் முழுக்க முழுக்க ஏசி மயமாகப்படவுள்ளது.
இது குறித்து கோயில் நிர்வாகம் தரப்பில் கூறுகையில், “மணக்குள விநாயகர் தேவஸ்தானத்தில் பக்தர்களின் நலன் கருதியும், பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்றும் ரூ.33 லட்சம் செலவில், தேவஸ்தானம் முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பக்தர்கள், உற்சவதாரர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த நன்கொடை தொகை போக மீதமுள்ள தொகை, தேவஸ்தான நிதியிலிருந்து ஏசி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
தேவஸ்தானம் முழுவதும் குளிர்சாதன வசதி ஏற்படுத்துவதற்காகும் செலவில் மூன்றில் ஒரு பகுதியான ரூ.11.90 லட்சத்தினை, புதுச்சேரி யூகோ வங்கி நன்கொடையாக இன்று வழங்கியது” என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான காசோலையை வங்கி தரப்பினர் முதல்வர் ரங்கசாமி முன்பாக கோயில் நிர்வாகத்திடம் தந்தனர். இந்த நிகழ்வில் பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.