
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவில் நேற்று மாலை கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி திருவிழா கடந்த 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருநாளான நேற்றுநடைபெற்றது.
நேற்று காலை 7 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளியதும் பூஜைகள் தொடங்கின. காலை 9 மணிக்கு பூர்ணாஹுதி தீபாராதனை, சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலையில் இருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பாடாகி சண்முக விலாசத்திலும், பிற்பகல் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திலும் எழுந்தருளினார். அங்கு, சுவாமிக்கு அபிஷேகம், அலங் காரம் நடைபெற்றது.

