காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூரில் அமைந்துள்ள பத்ர காளியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ‘அம்பரன்’ என்ற அசுரனை அஷ்டபுஜ பத்ர காளியம்மன் அழித்து அகிலத்தை காத்ததால், இவ்வூருக்கு ‘அம்பரகரம்’ என்று பெயர் வந்தது. பின்னர் ‘அம்பகரம்’ என்றாகி, தற்போது ‘அம்பகரத்தூர்’ என்று அழைக்கப்படுகிறது.
மதலோலை என்ற பெண்ணுக்கு துருவாச மாமுனியின் சாபத்தால் அம்பரன், அம்பன் என்ற 2 அசுரக் குழந்தைகள் பிறந்தன. இவ்விருவரும் அசுர குருவான சுக்கிரனிடம் கல்வி பயின்று, இறைவனிடம் வேண்டி எல்லையற்ற ஆற்றலைப் பெற்றனர். பின்னர் தேவர்களுக்கும், நன்மக்களுக்கும் பெருந்துயர் இழைத்து வந்தனர்.
தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பார்வதியையும், திருமாலையும் சிவபெருமான் அம்பலுக்கு அனுப்பி வைத்தார். பார்வதி அழகான பெண் உருவில் அங்கு சென்றபோது, அவரை திருமணம் செய்து கொள்ள இரு அசுரர்களும் விரும்பினர். இதனால் அசுர சகோதரர்களிடையே போட்டி ஏற்படுத்தி முதலில் அம்பனையும், திருமால் கொடுத்த வாளால் அம்பரனையும் பார்வதி அழித்தாள். பின்னர் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க பராசக்தி, பத்ரகாளி உருவிலேயே இத்தலத்தில் கோயில் கொண்டாள் என்பது நம்பிக்கை.
‘அஷ்டபுஜ பத்ரகாளியம்மன்’ என்ற பெயரில் மூலவராகவும், ‘பத்ரகாளியம்மன்’ என்ற பெயரில் உற்சவராகவும் அருள் பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் சித்திரை மாதம் தொடங்கி மகிஷ சம்ஹார நினைவு பெருந்திருவிழா நடைபெறும். அதில் வைகாசி 2-வது செவ்வாய்கிழமையில் மகிஷ சம்ஹார வைபவம் நடைபெறும். இக்கோயிலில் தை, ஆடி மாத கடைசி செவ்வாய்க் கிழமைகளில் ஏகதின லட்சார்ச்சனையும், கடைசி வெள்ளிக்கிழமைகளில் திருவிளக்கு வழிபாடும் நடைபெறும்.