கர்நாடக சங்கீத மேடைகளுக்கு நேரடியாகக் கம்பராமாயணத்தைக் கொண்டு சேர்க்கும் இசை நிகழ்ச்சி அமெரிக்காவின் டாலஸ், டெக்ஸாஸ் நகரில் நடக்கவிருக்கிறது!
கர்நாடக சங்கீத மேடைகளில் கம்பராமாயணப் பாடல்களைப் பாடும் ஓரிரு முயற்சிகள் இதற்கு முன் தமிழகத்தில் நடந்துள்ளன. பாடகர்கள் சேஷகோபாலன், சிக்கில் குருச்சரண் போன்றோர் சில முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர். ஆனால் விருத்தம் போல் அல்லாமல், ஒரு முழுமையான பாடலாக, பாடகருடன் பியானோ, மிருதங்கம், வயலின், கஞ்சிரா, இணைந்து இசைக்கும் முழு வடிவ கர்நாடக இசைக் கச்சேரி என்பது கம்பராமாயணப் பாடல்களுக்கு இதற்கு முன்னால் நடந்ததில்லை. அப்படி ஒரு கச்சேரி வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி டாலஸ், டெக்ஸாஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற நாக் கலையரங்கில் நடக்கவிருக்கிறது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற டர்ஹாம் சிம்பொனியுடன் இணைந்து, தமிழ்ச் சங்கப் பாடல்களுக்கு இசைவடிவம் கொடுத்து உலக அரங்குக்கு எடுத்துச்சென்ற இசையமைப்பாளர் ராலே ராஜன் (ராஜன் சோமசுந்தரம்), தேர்ந்தெடுக்கப்பட்ட 16 கம்பராமாயணப் பாடல்களுக்கு, ராகம் – தாளம் சேர்ந்த முறையான கர்நாடக இசை வடிவம் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு பாடலையும் பாடும் முன் அப்பாடலின் கவிதை நயத்தை ரசிக்கும் படி ரசனையான முன்னுரை வழங்கவும் ஏற்பாடு செய்திருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.
தமிழ், மலையாளத் திரைப்படங்களில் பாடல்கள் பாடியவரும், இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பல கர்நாடக இசைக்கச்சேரிகள் செய்தவருமான ப்ரியா கிருஷ் இந்த நிகழ்ச்சியில் பாடவுள்ளார். அவருடன், ஏ.ஆர். ரஹ்மான், தேவி ஶ்ரீ பிரசாத், எஸ்.எஸ். தமண் உள்ளிட்ட பலருக்கு பியானோ வாசித்துவரும் சாய் சங்கர் கணேஷ் பியானோவில் இணைகிறார். புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர்கள் அமெரிக்காவில் பாடும்போது, அவர்களின் இசை நிகழ்ச்சிகளில், உமாமகேஷ் (வயலின்), ராஜு பாலன் (மிருதங்கம்) ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் இணைகிறார்கள். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் அமெரிக்கக் கிளை ஒருங்கிணைப்பு செய்துள்ள இந்நிகழ்ச்சி குறித்து மேலதிகத் தகவல்களைத் தெரிந்துகொள்ள இசையார்வலர்கள் contact@visnupuramusa.org என்கிற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.